பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்தாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்துள்ளார். இதில் பாகிஸ்தான் அணியானது ஏற்கனவே முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியோ அபார வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும்.
அதேசமயம், பாகிஸ்தான் அணியானது தொடரை இழக்காமல் இருக்க இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்கான இரு அணியிலும் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ், மாட் பாட்ஸ், ஜாக் லீச், ஷோயப் பஷீர்
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), காம்ரன் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, அமீல் ஜமால், நோமன் அலி, சஜித் கான், ஸாஹித் மஹ்மூத்.