
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவோருக்கான ‘வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருது’ பரிந்துரை பட்டியலை ஐசிசி நேற்றையை தினம் அறிவித்தது. இதில் வளர்ந்து வரும் வீரர் விருதுகான பரிந்துரைப் பட்டியலில் பாகிஸ்தானின் சைம் அயூப், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ், வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப் மற்றும் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தாண்டிற்கான வளர்ந்து வரும் வீராங்கனைகள் பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஷ்ரேயங்கா பாட்டீல், அயர்லாந்து வீராங்கனை பிரேயா சார்ஜென்ட், ஸ்காட்லாந்தின் சஸ்கியா ஹார்லி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் அன்னெரி டெர்க்சன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் வாக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு வீரர், வீராங்கனைக்கு வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.