வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்துவீச அழைத்துள்ளார்.
இப்போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரர் துனித் வெல்லாலகேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் இலங்கை அணியோ முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இலங்கை பிளேயிங் லெவன்: பாதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா(கே), பானுக ராஜபக்ச, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரனா, நுவன் துஷார
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: பிராண்டன் கிங், எவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர், ரோஸ்டன் சேஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பவல்(கே), ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர், அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப்.