வருகிற அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்காக டெம்ப பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையிலிருந்து பிரபல தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டி20 ஆட்டத்தின்போது இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், டி20 உலகக் கோப்பை என இரண்டிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்தக் காயத்துக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு வந்த பிறகு கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் மருத்துவ நிபுணரிடம் பிரிடோரியஸ் கலந்தாலோசிப்பார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க டி20 உலகக் கோப்பை அணியில் பிரிடோரியஸுக்குப் பதிலாக மார்கோ ஜான்சென் தேர்வாகியுள்ளார்.