தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக தமதமாக தொடங்கிய இப்போட்டியானது 17ஆவது ஓவர்களாக குறைப்பட்டது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் மோஹித் ஹரிஹரன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அஜிதேஷ் குருஸ்வாமி 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு போட்டியின் இடை இடையே மழை காரணமாக போட்டி நடைபெறுவதில் தொடர்ந்து தாமதமானது.
பின்னர் நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களைச் சேர்த்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணமாக இப்போட்டியானது முடிவு எட்டப்படாமலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் கரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.