சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டமைக்காக துனித் வெல்லாலகேவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கை வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்கிரம அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இதன் மூலம், ஆகஸ்ட் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாக அவர் தேர்வாகியுள்ளார்.
ஒரே நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனை ஐசிசியின் மாதாந்திர விருதினை வெல்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் இந்த ஆண்டின் ஜூன் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.