ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 104 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிக்கோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 98 ரன்களையும், ஜான்சன் சார்லஸ் 43 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியானது சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாகவே இப்ராஹிம் ஸத்ரான் 38 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொறப் ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளைபெற்ற வீரராக ரோவ்மன் பாவெல் 14 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக முன்னாள் வீரர் கீரென் பொல்லார்ட் 13 வெற்றிகளை பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் அதனை ரோவ்மன் பாவெல் முறியடித்துள்ளார். மேலும் இப்பட்டியலில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி 28 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.