உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடுகிறது.மேலும் இது இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் 100ஆவது டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வைட் (கே), டேக்நரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கீமார் ரோச், ஜோமெல் வாரிக்கன், ஷானன் கேப்ரியல்
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கே), ஷுப்மான் கில், விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனட்கட், முகேஷ் குமார், முகமது சிராஜ்.