
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்கியா ரஹானே. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமது நகர் மாவட்டத்தில் 1988ஆம் ஆண்டு பிறந்தார். அவரது அப்பா ஒரு போக்குவரத்து தொழிலாளியாக இருந்தார். ரஹானே தனது 7 வயதில் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தனக்கு அப்போது கிரிக்கெட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றும், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவே இந்த கிளப்பில் தனது பெற்றோர் சேர்த்ததாகவும் ஒரு பேட்டியின் போது அவரே ரஹானே கூறியுள்ளார்.
உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்தாலும், பின்னாளில் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுக்க, இந்த பயிற்சி மையம் உதவியது. கிரிக்கெட்டுடன் கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட ரஹானே அதில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த ரஹானே ,தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்டோருக் கான அணி, இந்திய அணி என்று அவரது பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ரஹானேவை ஒரு பொறுமையான டெஸ்ட் பேட்ஸ்மேன் தான் பலருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மைதானத்தில் அதிரடி காட்ட அவர் தவறியதில்லை. டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமை ரஹானேவுக்கு உண்டு. 2012 ஆம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார்.