
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், ஒருநாள் அணியின் கேப்டனுமானவர் மிதாலி ராஜ். இவர் 1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை இந்திய மகளிர் கிரிக்கெட்டின் ஒரு அஸ்திவாரமாக தனது பணியை திறம்படச் செய்து வருகிறார் மிதாலி ராஜ்.
தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்தவர் மிதாலி ராஜ். ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி, இந்திய அணியில் இடம்பிடித்தார்.
ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் போட்டிகலில் விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார்.