
சச்சின்... இந்தப் பெயரைக் கேட்கும்போதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்வு ஏற்படும். ஆல் இந்தியா ரேடியோ கமெண்ட்ரிகளில் கிரிக்கெட் கேட்கத் தொடங்கி பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து, கலர் டிவியில் பார்த்து பிரமித்த வேளையில் நேற்று வந்த லைவ் ஸ்டீரிமிங்கிலும் வலம் வந்தவர் சச்சின்.
இவர் கிரிக்கெட் விளையாடிய காலக்கட்டத்தில், இவருடன் சேர்ந்து நாமும் இந்தியாவும் ஒன்றாக வளர்ந்தோம். இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால் அந்த மதத்தின் கடவுள் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் ஆடுகிறார் என்றால் பள்ளி மாணவர்களுக்கு 'காய்ச்சல்' வந்துவிடும். இந்தியாவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியில் இருக்கும். களை எடுக்கச் செல்பவர்கள் இருந்து, கார்ப்ரேட் கம்பேனிகளில் வேலை செய்பவர் வரை யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.
பஞ்சாயத்து போர்டு தொலைக்காட்சியிலிருந்து சாலையோரக் கடைகளில் இருக்கும் தொலைக்காட்சி வரை அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதும். அவர் ஆட்டம் இழந்துவிடக் கூடாது என்பதற்காக தொலைக்காட்சிகளுக்கு பூஜை செய்யப்படும்.