வரலாற்று சாதனை பட்டியளில் இடம்பிடித்த ஷாகிப் அல் ஹசன்!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி விளையாடியது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்த வங்கதேச அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இதில் வங்கதேச அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷாகிப் அல் ஹசன் அபாரமாக விளையாடி 93 ரன்களிலும், தவ்ஹீத் 92 ரன்களிலும் எடுக்க, இறுதியில் முசிபிர் ரஹீம் 44 ரன்கள் சேர்த்தார்.
இதனால் வங்கதேச அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி வங்கதேச பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தது. இதனால் அயர்லாந்து அணி 30.5 ஓவரில் 155 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 183 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் 24 ரன்களை தொட்ட போது ஒரு மகத்தான சாதனையை படைத்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார்.
இதற்கு முன்பு ஜெயசூர்யா மற்றும் அஃப்ரிடி ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய போது 300 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை தொட்ட நிலையில், தற்போது பேட்டிங்கிலும் 7000 ரன்கள் அடித்திருக்கிறார். வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றார்.
இதேபோன்று பந்துவீச்சில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரேஹான் அகமது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 300 விக்கெட் என்ற மைல் கல்லை அவர் தொட்டு இருந்தார். இதேபோன்று வங்கதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் டி20 யில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் வகித்து வருகிறார்.