நான்கு போட்டிகளில் நான்கையும் வெல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது - அக்ஸர் படேல்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவாமல் 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது. அதேசமாயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இரண்டாவது தோல்வியைப் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் அக்ஸர் படேல், “அணி விளையாடும் விதத்தைப் பார்த்தால், எல்லோரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.விளையாடிய நான்கு போட்டிகளில் நான்கையும் வெல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போட்டியில் எதிரணி வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது பிடிக்கும், எனவே ஆரம்பத்தில் சுழற்பந்து வீச்சைப் பயன்படுத்துவது ஒரு நல்ல வழி என்று நான் உணர்ந்தேன்.
பந்து நின்று வந்ததுடன், சிறிது பவுன்ஸும் இருந்தது, எனவே பவர்பிளேயில் சுழற்பந்து வீச்சாளர்களைத் தாக்குவது கடினம் என்று உணர்ந்தேன். நான் வீசிய 19ஆவது ஓவர் ஒரு தவறான முடிவாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வென்றததால் அது பரவாயில்லை. மேற்கொண்டு குல்தீப் யாதவ் எங்களுக்காக தொடர்ந்து இதனை செய்து வருகிறார். ஆனால் விப்ராஜுக்கு இன்று சிறப்பான நாளாக அமைந்தது. 18ஆவது ஓவரில் கூட அவர் பந்து வீசிய விதம் அருமையாக இருந்தது.
ராகுல் போன்ற ஒருவர் உங்களுடைய பேட்டிங் வரிசையில் இருந்தால் எனது உங்களுடைய வேலையை எளிதாகிறது. இதற்கு முன் நானும் பல்வேறு இடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க பயன்படுத்தப்பட்டிருக்கிறேன், எனவே அது எளிதானது அல்ல என்பது எனக்குத் தெரியும். அதனால் அவரைப் போன்ற ஒருவர் இருப்பது சிறந்தது. அவர் ஒரு முதிர்ந்த இன்னிங்ஸை விளையாடினார் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்த தனது ஃபார்மைத் தொடர்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் பில் சால்ட் 37 ரன்களையும், விராட் கோலி 22 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில், கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 93 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.