யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் பட்லருடன் இணைந்த ஹாரி ப்ரூக் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாட முயற்சித்த ஹாரி புரூக் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் பொறுப்புடன் விளையாடி வந்த ஜோஸ் பட்லர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன் என அனைடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அரைசதம் கடது விளையாடி வந்த ஜோஸ் பட்லரும் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக புதிய வரலாறு படைத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை அர்ஷ்தீப் சிங் முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக யுஸ்வேந்திர சஹால் 96 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அர்ஷ்தீப் சிங் 61 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.