பாகிஸ்தானை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி!

Updated: Sat, Mar 25 2023 11:22 IST
Image Source: CricketnMore

பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, அஃப்ரீடி போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுடன் களமிறங்கியது.

இந்நிலையில், பாகிஸ்தான் இளம் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தொடர்ந்து மிரட்டலாக பந்துவீசி அசத்தியது. இதனால், மொத்தம் 7 பேர் ஒற்றை இலக்க ரன்களுக்கு நடையைக் கட்டினர். அதிகபட்சமாக இமாத் வாசிம் 18 (32), தஹிர் 16 (9), கேப்டன் சதாப் கான் 12 (18) ஆகியோர்தான் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 92/9 ரன்களை மட்டும்தான் எடுத்தது.

இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 9 ரன்களிலும், குலாபுதின் நைப் ரன்கள் ஏதுமின்றியும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் வந்த முகமது நபி ஒருமுனையில் அதிரடியாக விளையாட, மறுபுறம் களமிறங்கிய கரும் ஜானத் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த முகமது நபி 38 ரன்களையும், நஜிபுல்ல ஸத்ரான் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது முதல் சர்வதேச டி20 வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை