அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே, டிம் சௌதீ ஆகியோரது அரைசதத்தின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களையும், டெவான் கான்வே 91 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ரிஷப் பந்த் 99 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்திருந்தனர்.
இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியானது 27.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த தோல்வி குறித்து நான் அதிகம் கவலைப்பட போவதில்லை. 2ஆவது நாளுக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் நான் அதற்கான காரணத்தை கூறினே. மேலும் மேகமூட்டமான சூழ்நிலைகள் மற்றும் சவாலான ஆடுகளத்தில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவோம் என்று நினைக்கவில்லை.
இதற்கான முழு பாராட்டும் நியூசிலாந்து வீரர்களையே சாறும். அது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், இதுபோல் நடப்பது இயல்பான ஒன்று தான். ஏனென்றால், முதல் இன்னிங்ஸில் அந்த மூன்று மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து இந்திய அணி எப்படிப்பட்ட அணி எனக் கூறுவது நியாயமாக இருக்காது. இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் சரிவிலிருந்து மீண்டு வந்தோம். முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றுவிட்டோம்.
ஆனால், இந்த போட்டியில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன. இந்த போட்டியில் சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதன் விளைவாக போட்டியில் தோல்வியைத் தழுவினோம். ஆனால், இந்த தோல்வியோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. இந்த சூழலில் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இரண்டாவது போட்டியில் எப்படி வலுவாக மீண்டு வருவது என்பதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket