வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையிலும், இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் குறிப்பாக அந்த அணியில் அதிகபட்ச ஸ்கோரே ஷாகிப் அல் ஹசன் விளாசிய 32 ரன்களே இருந்தது. இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஆகஷ் தீப், முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்று விராட் கோலி உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ஷுப்மன் கில் மற்று ரிஷப் பந்த் ஆகியோர் அடுத்தடுத்து சதங்களை விளாசியதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை குவித்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 119 ரன்களையும், ரிஷப் பந்த் 109 ரன்களையும் சேர்த்திருந்தனர்.

இதன்மூலம் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் 33 ரன்களுக்கும், சாத்மான் இஸ்லாம் 35 ரன்களிலும் விக்கட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிட கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்த நிலையில், மறுபக்கம் விளையாடிய மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களைச்ச் சேர்த்தது. 

இதனையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் ஷாகிப் அல் ஹசன் இணை தொடர்ந்தனர். இதில் ஷாகிப் அல் ஹசன் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் ஒரு ரன்னிலும், மெஹிதி ஹசன் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 82 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ‘

Advertisement

இதனால் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ரவி அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதம் மற்றும் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News