இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் இன்னிங்ஸைத் தொடங்க பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை தடுமாறச்செய்தனர். இதனால் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் விளையாடிய இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 

Advertisement

அதன்பின் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப் ஒரு ரன்னில் ரவீந்திர ஜடேஜாவிடம் வீழ்ந்தார். அதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 20 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜின் அபாரமான கேட்ச்சால் அஸ்வின் பந்துக்கு விக்கெட்டை இழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களுக்கும், ஜோ ரூட் 29 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெஸ்வால் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். அதிலும் பாஸ்பால் எனும் அதிரடி அணுகுமுறைக்கு பெயர் போன இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அதிரடியான ஆட்ட அணுகுமுறையை பின் பற்றியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

Advertisement

தொடர்ந்து அதிவேகமாக ரன்களைக் குவித்து வந்த ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுமுனையில் மோசமான பந்துகளை மட்டுமே டார்கெட் செய்து விளையாடி வந்த ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேக் லீச் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். 

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 119 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், ஷுப்மன் கில் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து 127 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News