1st Test, Day 3: வங்கதேசம் 495 ரன்னில் ஆல் அவுட்; வலுவான தொடக்கத்தில் இலங்கை!

Updated: Thu, Jun 19 2025 12:20 IST
Image Source: Google

SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி 495 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்னிலும், இரட்டை சதமடிப்பார் என் எதிர்பார்க்கப்பட்ட முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய வீரர்களில் லிட்டன் தாஸ் 90 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 484 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் நஹித் ரானா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 495 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசித்த ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் லஹிரு உதாரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் லஹிரு உதாரா 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து நிஷங்காவுடன் ஜோடி சேர்ந்துள்ள தினேஷ் சண்டிமால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தார். இதன் காரணமாக மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Also Read: LIVE Cricket Score

இதில் பதும் நிஷங்கா 46 ரன்களுடனும், தினேஷ் சண்டிமால் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து 395 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை