இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தியது 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். பின்னர் 141 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து விளையாடிய உஸ்மான் கவாஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸும் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்த்தினார். பின் உஸ்மான் கவாஜா 232 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 102 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

Advertisement

இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் ஒஷாதா ஃபெர்னாண்டோ, திமுத் கருணரத்னே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.  இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தினேஷ் சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸ் 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் சண்டிமால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருடன் இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வாவும் ஓரளவு தாக்குபிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதன்மூலம் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாட முயற்சி செய்த தனஞ்செயா டி சில்வா 22 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் தினேஷ் சண்டிமாலுடன் இணைந்துள்ள குசால் மெண்டிஸ் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்துள்ளார். இந்நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக மூன்றாம் நாள் உணவு இடைவேளையானது முன் கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களைச் சேர்த்து தடுமாறி வருகிறது. இதில் தினேஷ் சண்டிமால் 63 ரன்களுடனும், குசால் மெண்டிஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News