1st Test, Day 3: அடுத்தடுத்து ஆட்டமிழந்த நட்சத்திரங்கள்; தனி ஒருவனாக சதமடித்து அணியை மீட்ட ஒல்லி போப்!
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெஸ்வா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அரைசதங்கள் மூலமாக 436 ரன்களைக் குவித்து, முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதில் அதிக பட்சமாக் ரவீந்திர ஜடேஜா 87 ரன்களையும், கேஎல் ராகுல் 86 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஸாக் கிரௌலி 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார். அதன்பின் மறுபக்கம் அரைசதம் நோக்கி நகர்ந்த பென் டக்கெட் 47 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 2 ரன்களிலும் என பும்ராவின் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒல்லி போப் இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியைக் கொடுத்தார். ஆனால் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் 10 ரன்களுக்கும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய பென் ஃபோக்ஸ் ஓரளவு தாக்குபிடித்து விளையாட, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒல்லி போப் சதமடித்து ஆசத்தினார்.
இதற்கிடையில் பென் ஃபோக்ஸ் 34 ரன்களைச் எடுத்த நிலையி அக்ஸர் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தாலும், 6ஆவது விக்கெட்டிற்கு 112 ரன்கள் பார்ட்னஷிப் அமைத்து அணியை முன்னிலைப்படுத்த உதவினா. இதனால் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஒல்லி போப் 148 ரன்களுடனும், ரெஹான் அஹ்மத் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவீச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளர். இதையடுத்து இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில் 126 ரன்கள் முன்னிலையுடன் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.