1st Test, Day 3: வியான் முல்டர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
Zimbabwe vs South Africa 1st Test: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 537 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 153 ரன்களையும், கார்பின் போஷ் 100 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 51 ரன்களையும் சேர்க்க முதல் இன்னிங்ஸில் 418 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் அனுபவ வீரர் சீன் வில்லியம்ஸ் சதமடித்து அசத்தியதுடன் 137 ரன்களையும், கேப்டன் கிரேய்க் எர்வின் 36 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்களைக் கூட தாண்டமால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இத்னால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானாலும் ஃபாலோ ஆனைத் தவிர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், கோடி யூசுஃப் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 167 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டோனி டி ஸோர்ஸி 22 ரன்களுடனும், வியான் முல்டர் 25 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் டி ஸோர்ஸி 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பெடிங்ஹாம் 35 ரன்களிலும், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், டெவால் பிரீவிஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னிலும், கைல் வெர்ரைன் மற்றும் கார்பின் போஷ் தலா 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வியான் முல்டர் சதமடித்தும், கேஷவ் மஹாராஜ் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 17 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 147 ரன்களுக்கும், கேஷவ் மஹாராஜ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 369 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் வெலிங்டன் மஸகட்சா 4 விக்கெட்டுகளையும், சிவாங்கா மற்றும் விசென்ட் மஸகட்சா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 537 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு கைடானோ மற்றும் பிரின்ஸ் மஸ்வௌரே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கைடானோ 12 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பிரின்ஸ் மஸ்வௌரே 5 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க தரப்பில் கார்பின் போஷ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து 505 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.