ரோஹித் சர்மா எனக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினார் - யஷஸ்வி ஜெஸ்வால்!

Updated: Fri, Jul 14 2023 14:58 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டோமினிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்திய அணியில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தான் யார் என்பதை உலகத்திற்கு ஜெய்ஸ்வால் நிரூபித்து காட்டியுள்ளார். அதேபோல் சில நாட்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், இன்று 350 பந்துகளை எதிர்கொண்டு 143 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இதன் மூலமாகவே வருங்காலத்தில் ஜெய்ஸ்வாலின் ஆதிக்கம் எந்த அளவு இருக்கப் போகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

சதம் விளாசிய பின் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், கொண்டாடிவிட்டு உடனடியாக ரோஹித் சர்மாவிடம் சென்று கட்டியணைத்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது வெறும் ஆரம்பம் தான் என்று 5 முறை வரை மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு மன உறுதியுடனும், உணர்வுப்பூர்வமாகவும் ஜெய்ஸ்வால் இருந்துள்ளார்.

பின்னர் ஜெய்ஸ்வால் பேசுகையில், “கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கம் முதலே எனக்கு ஆதரவாக இருந்தார். நாங்கள் இணைந்து பேட்டிங் செய்யும் போது, எனக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த மைதானத்தில் எங்கு ரன்கள் சேர்க்க முடியும், எந்த பகுதியில் என்னால் ரன்கள் சேர்க்க முடியும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். களத்தில் மட்டுமல்லாமல், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, என்னை மனரீதியாக தயார்ப்படுத்தினார். உன்னால் முடியும் என்று கூறி எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.

இந்தப் போட்டியில் நிறையவே கற்றுக் கொண்டுள்ளேன். அது எதிர்காலத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சதம் எனக்கு எமோஷனலானது. என் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள், எனக்கு ஆதரவாக இருந்தவர்கள், எனக்கு உதவி செய்தவர்கள் என்று அனைவருக்கும் சதத்தை அர்ப்பணிக்கிறேன். எனக்காக உதவிய அனைவருக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன். அதேபோல் இதனை வெறும் தொடக்கமாக மட்டுமே பார்க்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் நிறைய ரன்கள் சேர்க்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை