இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிஷன் மதுஷ்கா 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் 16 ரன்களுக்கும், திமுத் கருணரத்னே 17 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் 5 ரன்களுக்கும், தினேஷ் சண்டிமல் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

இதனால் இலங்கை அணி 57 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இணைந்த தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து அசத்தினர். இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் இவர்களை பிரிக்க முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். 

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்செயா டி சில்வா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தைப் பதிவுசெய்ய, கமிந்து மெண்டிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 102 ரன்கள் சேர்த்த நிலையில் கமிந்து மெண்டிஸ் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என கேப்டன் தனஞ்செயா டி சில்வாவும் 102 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 68 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் கலித் அஹ்மத், அறிமுக வீரர் நஹித் ரானா ஆகியோர் தலா 3 மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியிலும் தொடக்க வீரர் ஸகிர் ஹசன் 9 ரன்களுக்கும், கேப்டன் நஹ்முல் ஹொசை சாண்டோ 5 ரன்களுக்கும், மொமினுல் ஹக் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் மஹ்முத் ஹசன் ஜாய் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை தரப்பில் விஷ்வா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News