மீண்டும் பினீஷராக மாறிய காரணத்தை விளக்கிய தினேஷ் கார்த்திக்!

Updated: Sat, Sep 24 2022 10:28 IST
Image Source: Google

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்திருந்தது. 

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி  8 ஓவர்களில் 90/5 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 7.2 ஓவர்களில் 92/4 ரன்களை குவித்து அசத்தியது. அதிலும் இப்போட்டியில் பினிஷராக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் எட்டாவது ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசி அசத்தினார். 

இப்போட்டி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக பினிஷராக இருந்திருக்கிறேன். அதன்பிறகு இந்திய அணிக்கு வந்தபோது, சில போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட, பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஆகியோர் எனக்கு உதவினார்கள். 

எந்த நேரத்தில் எந்த ஷாட்டை ஆட வேண்டும், எந்த பந்திற்கு எந்த ஷாட்டை ஆட வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கினார்கள். மேலும், பயிற்சியின்போது தனிக்கவனமும் செலுத்தினார்கள். இதனால்தான், மீண்டும் பினிஷராக திகழ்கிறேன். அவர்களுக்கு எனது நன்றிகள்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “போட்டியின் சூழ்நிலை கருதிதான் கேப்டன் முடிவெடுப்பார். அக்சர் படேல் களமிறங்கியபோது ஸ்பின்னர்களுக்கு ஓவர்கள் இருந்தது. அக்சர் படேல் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியவர். பொதுவாக இடது கை பேட்டர்கள், லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார்கள். லெக் ஸ்பின்னருக்கு ஓவர்கள் இருந்ததால் அக்சர் களமிறக்கப்பட்டார். அவ்வளவுதான். அதில் வேறு எந்த விஷயமும் இல்லை” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை