ZIM vs AFG, 2nd Test: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; ஆஃப்கான் தடுமாற்றம்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஜிம்பாப்வே பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 25 ரன்களையும், ரஹ்மத் ஷா 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களில் ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா மற்றும் நியூமன் நியாம்ஹுரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிளெஸ்ஸிங் முசரபானி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜெய்லார்ட் கும்பி 4 ரன்களுடனும், பென் கரண் ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் கும்பி 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறக்கிய கைடானோவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னார் பென் கரண் 15 ரன்களுக்கும், டியான் மேயர்ஸ் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ரஸா மற்றும் கேப்டன் கிரேய்க் எர்வின் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசடஹ்தினர். பின் 61 ரன்கள் எடுத்த நிலையில் சிக்கந்தர் ரஸாவும், 75 ரன்களை எடுத்திருந்த நிலையில் கிரேய்க் எர்வினும் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் சீன் வில்லியம்ஸ் தனது பங்கிற்கு 49 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், அஹ்மத்ஸாய் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனையடுத்து 85 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தன் அணியில் தொடக்க வீரர்கள் அப்துல் மாலிக் ஒரு ரன்னிலும், ரியாஸ் ஹசன் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் 13 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் ரஹ்மத் ஷா 18 ரன்களுடனும், ஸியா உர் ரஹ்மான் ரன்கள் ஏதுமின்றியும் என களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸிங் முஸரபானி 2 விக்கெட்டுகளையும், சிகந்தர் ரஸா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி 40 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.