2nd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களில் ஆல் அவுட்; விண்டீஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் ஆஸி!

Updated: Fri, Jan 26 2024 12:00 IST
2nd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களில் ஆல் அவுட்; விண்டீஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட் (Image Source: Google)

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய விண்டிஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கவேம் ஹாட்ஜ் - ஜோசுவா டா சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 71 ரன்களுக்கு கவேம் ஹாட்ஜும், 79 ரன்களுக்கு ஜோசுவா டா சில்வாவும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களைச் சேர்த்ததுது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் கெவின் சின்க்ளேர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய கீமார் ரோச் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, மறுபக்கம் அரைசதம் கடந்த கையோடு சின்க்ளேரும் விக்கெட்டை இழந்தார்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 

அணியின் தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷாக்னே 3 ரன்கள் எடுத்த நிலையில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதைனைத்தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 8 ரன்களுக்கும், கடந்து போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து கீமர் ரோச் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 24 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்.  வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கீமார் ரோச் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 287 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை