2nd Test, Day 4: விண்டிஸூக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியானது 243 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பியூ வெப்ஸ்டர் 60 ரன்களையும், அலெக்ஸ் கேரி 63 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களையும், ஜான் காம்பெல் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களையும், ஷமார் ஜோசப் 29 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வு மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா உள்ளிட்டோர் சொற் ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தங்களின் அரைசதங்களையும் பூர்த்தி செய்தனர். அதன்பின் 52 ரன்களில் கேமரூன் க்ரீனும், 71 ரன்களில் ஸ்டீவ் ஸ்மித்தும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பியூ வெப்ஸ்டர் 2 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 39 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை அலெக்ஸ் கேரி 26 ரன்களுடனும், கேப்டன் கம்மின்ஸ் 4 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கேரி 30 ரன்களுக்கும், கம்மின்ஸ் 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 277 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.