டிஎன்பிஎல் 2025: திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பேட்டிங்கில் 83 ரன்களையும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

Advertisement

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு வசீம் அஹ்மத் மற்றும் சுரேஷ் குமார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கௌசிக், சஞ்சய் யாதவ், ராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான வசீம் அஹ்மத் 36 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜாஃபர் ஜமால் அதிரடியாக விளையாடி 4 சிக்ஸர்களுடன் 33 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதன் காரணமாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பெரியசாமி மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷிவம் சிங் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பாபா இந்திரஜித் ஒருபக்கம் ஸ்டிரைக்கை மாற்ற, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அதன்பின் இப்போட்டியில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 83 ரன்களை சேர்த்து அஸ்வின் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விமல் மற்றும் தினேஷ் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபா இந்திரஜித் 27 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News