இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ஷத்மான் இஸ்லாமும் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த பெவிலியன் திரும்பினார்.
இதனால் வங்கதேச அணி 29 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசியதன் மூலம் அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நஜ்முல் ஹொசைன் சாண்டோ 31 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. வங்கதேச அணி தரப்பில் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதனையடுத்து இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்க இருந்த நிலையில், கான்பூரில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்துவரும் காரணத்தால் இரு அணி வீரர்களும் தங்கள் தங்கி இருக்கும் ஹோட்டல்களுக்கு திரும்பியுள்ளதாக தகவல் வளியாகியுள்ளது. இதனால் இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கேட்ச்), ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த்(வ), கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேசம் பிளேயிங் லெவன்: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது.