IND vs AUS, 2nd Test: ஜடேஜா, அஸ்வின் அபாரம்; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஹாண்ட்ஸ்கோம்ப் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் 139 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறிய போது, அக்சர் பட்டேல் அபாரமாக விளையாடினார். இதன் மூலம் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடியது.
உஸ்மான் கவாஜா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிராவிஸ் ஹேட் மற்றும் லாபஸ்சேன் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தனர். 61 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்புடன் 3ஆவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்தது.
அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹேட் மற்றும் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்திய நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சரிவு தொடங்கியது. மார்னஸ் லபுசாக்னே, விக்கெட்டை ஜடேஜா கைப்பற்ற, அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் மின்னல் வேகத்தில் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினர்.
அதிலும் ஜாடேஜாவின் ஸ்பெல்லை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில், வழக்கம்போல தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஒற்றையிலக்க ரன்னுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இணைந்த ரோஹித் - புஜாரா இணை விளையாடி வருகிறது.
இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது 14 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இதில் ரோஹித் 12 ரன்களுடனும், புஜாரா ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இன்னும் 101 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.