டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் பொட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபாரமான இரட்டை சதத்தின் மூலம் 396 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வின் ஜெய்ஸ்வால் 209 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இப்போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்ப்ரித் பும்ரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை பும்ரா படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் கபில் தேவ் 39 போட்டிகளில் 150 ரன்களை கைப்பெற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது 34 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா முறியடித்துள்ளார்.
மேலும் ஆசிய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் பும்ரா பெற்றார். இதில் பாகிஸ்தான் அணியின் வக்கார் யூனிஸ் 27 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து சோயப் அக்தர் மற்றும் இம்ரான் கான் அகியோர் 37 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்திற்கு தள்ளிப்பட்டுள்ளனர்.