IND vs NZ, 3rd ODI: அடுத்தடுத்து சதங்களை விளாசிய ரோஹித், கில்; இமாலய இலக்கை நோக்கி இந்தியா!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆட, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 83 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் சதமடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்துவந்த ரோஹித் சர்மா, 1100 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 30ஆவது சதமாகும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவின் 28ஆவது சதம் இது.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை சனத் ஜெயசூரியாவின் பகிர்ந்துள்ளார். ஜெயசூரியாவும் தொடக்க வீரராக 28 சதங்கள் அடித்துள்ளார். இன்னுமொரு சதமடித்தால் ஜெயசூரியாவை ரோஹித் முந்திவிடுவார். இந்த பட்டியலில் 45 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 30 சதங்களுடன், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்து 3ஆம் இடத்தை பாண்டிங்குடன் பகிர்ந்துள்ளார். ரோஹித்துக்கு மேலாக, சச்சின் டெண்டுல்கர் (49) மற்றும் விராட் கோலி (46) ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.
ரோஹித் சர்மாவை தொடர்ந்து ஷுப்மன் கில்லும் சதமடித்தார். 74 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் கில் சதமடித்தார். இந்த தொடரின் முதல் போட்டியில் இரட்டை சதமடித்த கில், இந்த போட்டியிலும் சதமடித்து அசத்தியுள்ளார். இதில் ரோஹித் - கில் ஆகிய இருவருமே சதமடித்து முதல் விக்கெட்டுக்கு 26.1 ஓவரில் 212 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 101 ரன்களுக்கும், கில் 112 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இப்போட்டியில் ஷுப்மன் கில் 112 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இத்தொடரின் 360 ரன்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 360 ரன்களைச் சேர்த்த வீரர் எனும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் சாதனையையும் ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
இதையடுத்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதில் இவரும் அதிரடி காட்டினால் நிச்சயம் 400+ ரன்களை இந்திய அணி குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.