IND vs NZ, 3rd Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் தடுமாறும் நியூசிலாந்து; ஆறுதல் வெற்றியைப் பெறுமா இந்தியா!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா 18 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்னிலும், முகமது சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் 31 ரன்களுடனும், ரிஷப் பந்த் ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸைத் தொடங்கியது. இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அரைசதங்களை பதிவுசெய்ததுடன் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரிஷப் பந்த் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சர்ஃப்ராஸ் கானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். மேற்கொண்டு சதத்தை நெருங்கிய ஷுப்மன் கில்லும் 90 ரன்களை சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி 263 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களைச் சேர்த்திருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 27 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவாது இன்னிங்ஸைத் தொடங்கியா நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், அணியின் மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வே 22 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்னிலும், டேரில் மிட்செல் 21 ரன்னிலும், டாம் பிளெண்டல் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில் யங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் 26 ரன்களிலும், இஷ் சோதி 8 ரன்னிலும், மேட் ஹென்றி 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்த பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணியும் இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறியது.
Also Read: Funding To Save Test Cricket
இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் அஜாஸ் படேல் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.