இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் - ஜோஸ் பட்லர்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அபிஷேக் சர்மா 29 ரன்களையும், ரிங்கு சிங் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே - ஹர்திக் பாண்டியா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் தலா 53 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த பில் சால்ட் 23 ரன்னிலும், பென் டக்கெட் 39 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக் 25 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதால் 19.4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. இப்போட்டியில் அரைசதம் கடந்த ஷிவம் தூபே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், “இப்போட்டியை நாங்கள் அற்புதமாகத் தொடங்கினோம், பவர்பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம், பேட்டிங் பவர்பிளேயின் முடிவில், நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருந்தோம். அப்படியான சூழலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நாங்கள் ஆட்டத்தில் சில நல்ல விஷயங்களைச் செய்தோம். ஆனால் ஷிவம் தூபேவை முதல் பந்திலேயே வீழ்த்து வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம்.
Also Read: Funding To Save Test Cricket
அதனை சரியாக பயன்படுத்திய அவர் ஒரு நல்ல இன்னிங்ஸை விளையாடினார். பேட்டிங்கைப் பொறுத்தவரை, நாங்கள் அருமையான நிலையில் இருந்தோம், ஆனால் அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. நாங்கள் எப்படி விளையாட விரும்புகிறோம் என்பதை இப்போட்டியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளோம். இதனைச் தொடர்ந்து செய்யும்போது, அது எங்களுக்கு பலனளிக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.