வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது.
அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் லபுஷாக்னே - கம்மின்ஸின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீட்டனர். இதில் லபுஷாக்னே 70 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 41 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் நாதன் லையனும் தனது பங்கிற்கு 41 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்களையும், ரிஷப் பந்த் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 155 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.மேலும் இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம். நாங்கள் இறுதிவரை போராட விரும்பினோம், துரதிர்ஷ்டவசமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. கடைசி இரண்டு செஷன்களையும் மதிப்பிடுவது கடினமாக இருக்கும். ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டியைப் பார்த்தால், எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன, ஆனால் நாங்கள் அவற்றை எடுக்கவில்லை. முன்னதாக நாங்கள் அஸ்திரேலிய அணியை 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழக்க செய்தோம்.
அதனால் நாங்கள் பேட்டிங் செய்யும் போதும் விஷயங்கள் கடினமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் கடினமான சூழ்நிலைகளில் இருந்து கடினமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். நான் ஒரு சூழ்நிலையைப் பார்க்க விரும்பவில்லை, மொத்தமாக இப்போட்டியில் நாங்கள் வெற்றிக்கு தேவையான அளவு செயல்படவில்லை. 340 ரன்கள் எளிதானது அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஒரு தளத்தை அமைத்து கடைசி இரண்டு செஷன்களில் விக்கெட்டுகளை கையில் வைத்திருக்க முயற்சித்தோம், ஆனால் அவர்கள் நன்றாக பந்துவீசி எங்களை அழுத்தத்தில் தள்ளினர்.
Also Read: Funding To Save Test Cricket
நாங்கள் இலக்கை நோக்கி செல்ல விரும்பினோம், ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இங்கு விளையாட்டில் வெல்வதற்கான வழிகள் உள்ளன, ஆனால் அதனை வெல்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் தவறிவிட்டோம். ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது பற்றி இன்று எந்த விவாதமும் நடக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். ஆனால் ரிஷப் பந்த், அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அதனால் அவர் சரியான வழியை கண்டுபிடித்து விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.