PSL 2023: இஸ்லாமாபாத்தை பந்தாடியது முல்தான் சுல்தான்ஸ்!

Updated: Sun, Feb 19 2023 20:37 IST
A comprehensive win for Multan Sultans as they defeat Islamabad United by 52 runs!
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இன்று முல்தானில் நடந்துவரும் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் வழக்கம்போலவே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ரிஸ்வான் 50 ரன்கள் அடித்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய ரைலீ ரூஸோவ் அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். ஆனால் ரூஸோவ் 30 பந்தில் 36 ரன்கள் மட்டுமே அடித்தார்.

அதன்பின்னர் டேவிட் மில்லர் மற்றும் பொல்லார்டு இணைந்து அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மில்லர் 25 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 52 ரன்களை விளாசினார். பொல்லார்டு 21 பந்தில் 32 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் முல்தான் சுல்தான்ஸ் அணி 190 ரன்களை குவித்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் பால் ஸ்டிர்லிங் 5 ரன்களிலும், ஹசன் நவாஸ் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின் 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் - காலின் முன்ரோ இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் வெண்டர் டுசென் 49 ரன்னில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அவரைத்தொடர்ந்து காலின் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் அபாஸ் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அபாஸ் அஃப்ரிடி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை