Boxing Day Test: சீட்டுக்கட்டாய் சரிந்த தென் ஆப்பிரிக்கா; க்ரீன் அபாரம்!

Updated: Mon, Dec 26 2022 13:09 IST
A good day for the hosts as they take charge of the Boxing Day Test! (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததால் பெருத்த சச்சரவுகள் ஏற்பட்டன. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைப்படும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டி போலவே இப்போட்டியிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் கேப்டன் டீன் எல்கர் 26 ரன்னிலும், சாரெல் எர்வீ 18 ரன்னிலும், டீ புரூய்ன் 12 ரன்னிலும், டெம்பா பவுமா 1 ரன்னிலும், ஜோண்டோ 5 ரன்னில்லும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 67 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 6 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெர்ரையன், மார்கோ ஜான்சன் இருவரும் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருப்பினும் அணியின் ஸ்கோர் 179 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. இதில் வெர்ரையன் 52 ரன்னிலும் , மார்கோ ஜேன்சன் 59 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 68. 4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் க்ரீன் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும், கம்மின்ஸ், போலண்ட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் தந்தனர். இதில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் வார்னர் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஜா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டேவிட் வார்னர் 32 ரன்களுடனும, மார்னஸ் லபுசாக்னே 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து 144 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை