இந்த வெற்றியானது எங்கள் அணிக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது - டெம்பா பவுமா!

Updated: Wed, Oct 05 2022 15:43 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ரைலி ரூசே 100 ரன்களையும், டி காக் 68 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியது.

இறுதியில் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்த தொடரில் இறுதியாக 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆறுதல் வெற்றியை ருசித்தது. இந்த தொடர் முழுவதுமே தென்னாப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் ஏற்கனவே இரண்டு தோல்விகளை சந்தித்ததால் முதல் முறையாக இந்திய மண்ணில் டி20 தொடரை இழந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெம்பா பவுமா, “இந்த வெற்றியானது எங்கள் அணிக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது. நாங்கள் முதல் போட்டியின் போது பேட்டிங்கில் கஷ்டப்பட்டோம். அதேபோன்று இரண்டாவது போட்டியில் பந்துவீச்சில் கஷ்டப்பட்டோம். ஆனால் இம்முறை மூன்றாவது போட்டியில் அனைத்து துறைகளிலுமே அசத்தலாக செயல்பட்டோம்.

இது ஒரு தரமான வெற்றி. இந்த வெற்றியில் இருந்து நாங்கள் பல விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். முதல் போட்டியில் பேட்டிங் சரிவராமல் போனதும், இரண்டாவது போட்டியில் பேட்டிங் சரிவந்தது. ஆனால் பந்துவீச்சில் திட்டங்களை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. ஆனால் இம்முறை அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பைக்கு இந்த வெற்றி மிகவும் முக்கியமான ஒன்று. எனவே இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம். அதோடு அடுத்து வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இன்னும் சில புதுமுக வீரர்கள் எங்கள் அணிக்காக விளையாட உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை