ஜடேஜாவிற்கு மீண்டும் பிசிசிஐ துரோகம் செய்துள்ளது - ஆகாஷ் சோப்ரா
இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரருக்குமான ஆண்டு ஊதிய விவரங்கள் பிசிசிஐ வெளியிட்டது. வழக்கம் போல ஏ +, ஏ, பி, சி என மொத்தம் 4 பிரிவுகளாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ-ன் முதன்மை பிரிவான ஏ+ல் தான் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரி இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. கடந்தாண்டும் இவர்கள் மூன்று பேர் தான் இந்த பிரிவில் இடம்பெற்றிருந்தனர். அதில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் கடந்தாண்டை போலவே இந்தாண்டும் ஜடேஜாவுக்கு ஏமாற்றம் தான். இந்திய அணிக்காக பல வெற்றிகளை குவித்த ஜடேஜா ஏன் ஏ+ பிரிவில் சேர்க்கப்படவில்லை என கடந்தாண்டே குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு அது துரோகம் என்ற பெயர் பெற்று விமர்சனங்கள் குவிகின்றன.
இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “ஏ + பிரிவில் பழைய வீரர்களே உள்ளனர். ஆனால் அதில் ஜடேஜா ஏன் இல்லை? அந்த பிரிவில் இடம்பெற மிகவும் தகுதியானவர் ஜடேஜா. தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் ஜடேஜா தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பெயர் இருந்திருக்க வேண்டும்.
அடுத்தாண்டு ஜடேஜா, கே.எல்.ராகுல் இருவருமே ஏ+ பிரிவில் இருக்க வேண்டும். வரும் காலங்களில் ரிஷப் பண்ட்-ம் சூப்பர் வீரராக இருப்பார். எனவே அவரின் பெயரும் ஏ+ ல் இருக்க வேண்டும். இதனையெல்லாம் பிசிசிஐ கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆண்டு ஊதியப்பட்டியலை வெளியிட வேண்டும்” எனக்கூறியுள்ளார்.