இது தரத்தையே கெடுக்கும் செயலாக இருக்கும் - ஹர்திக் பாண்டியா குறித்து ஆகாஷ் சோப்ரா!

Updated: Mon, Nov 27 2023 23:21 IST
இது தரத்தையே கெடுக்கும் செயலாக இருக்கும் - ஹர்திக் பாண்டியா குறித்து ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள், கழற்றி விட்ட வீரர்கள் மற்றும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ளன. அதில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்டிக் பாண்டியா திடீரென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் மும்பை அணியில் தம்முடைய ஐபிஎல் கேரியரை தொடங்கி 2021 வரை 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினாலும் 2022 சீசனில் அவரை 15 கோடிக்கு வாங்கிய குஜராத் தங்களுடைய கேப்டனாக நியமித்தது. அதில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த அவர் 2ஆவது சீசனில் இறுதிப்போட்டி வரை குஜராத் அணியை அழைத்துச் சென்று அசத்தினார்.

இந்த சூழ்நிலையில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் போது பாண்டியா ஏன் மும்பைக்கு சென்றார் என்பதே பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் டி20 கேப்டன்ஷிப் வேண்டும் என்பதற்காக பாண்டியா மும்பைக்கு சென்றிருந்தால் அது அவருடைய தரத்தையே கெடுக்கும் செயலாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கேப்டனாக வர விரும்பியதால் மும்பை அணிக்கு சென்றுள்ளார் என்பது ஹர்திக் பாண்டியாவின் கேரியரில் நன்றாக இருக்காது. குஜராத்துக்கு சென்ற நீங்கள் கேப்டனாக பொறுப்பேற்றீர்கள். அதிலிருந்து வெளியேறிய நீங்கள் தற்போது மும்பை அணியின் கேப்டனாக இருக்க முடியாது. ஆனாலும் இந்தியாவின் கேப்டனாக நீங்கள் வர விரும்புவதற்காக இதை செய்தது சரியானதல்ல.

இதை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் சரியாக தோன்றவில்லை. குறிப்பாக ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனாக இல்லாத நீங்கள் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக வர விரும்புகிறீர்கள். இது கேட்பதற்கு நன்றாக இல்லை. மறுபுறம் பாண்டியாவை விடுவித்ததால் குஜராத் அணிக்கு பெரிய தொகை மீதம் கிடைத்தது. ஆனால் அவரை விடுவித்தது குஜராத் அணிக்கு எந்த பயனையும் கொடுக்கப் போவதில்லை.

ஏனெனில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்து 2வது வருடத்தில் ஃபைனல் வரை அழைத்துச் சென்ற ஒருவர் தற்போது உங்களுடைய அணியில் இருக்கப் போவதில்லை. இருப்பினும் இந்த முடிவின் பின்னணியில் அவர்களும் ஏதோ ஒரு விஷயத்தை வைத்திருக்கலாம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை