இஷான் கிஷன் குறித்து கருத்து தெரிவித்த ஆகாஷ் சோப்ரா!

Updated: Tue, Feb 22 2022 21:58 IST
Image Source: Google

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல் ராகுல் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக இடதுகை துவக்க வீரரான இஷான் கிஷன் மூன்று போட்டிகளிலுமே இடம் பிடித்து விளையாடினார்.

பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இஷான் கிஷன் இந்த மூன்று போட்டிகளிலுமே தனது அதிரடியை வெளிப்படுத்த தவறிவிட்டார் என்றே கூறலாம். ஏனெனில் முதலாவது போட்டியின் போது 42 பந்துகளை சந்தித்து 35 ரன்கள் மட்டுமே குவித்த அவர் இரண்டாவது போட்டியிலும் 10 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே குவித்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் 34 பந்துகளில் 36 ரன்கள் குவித்து இருந்தாலும் முன்பு போன்று அவரிடம் அதிரடி வெளிப்படவில்லை. இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் அவரின் அதிரடியை நம்பி மும்பை அணி இந்த ஆண்டு அதிகபட்ச தொகையாக அவரை 15.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளதால் அவரது ஆட்டத்தின் மீது பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஷான் கிஷன் செய்யும் தவறு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “இஷான் கிஷன் மிகச்சிறந்த வீரர் தான். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் தற்போது அவர் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே அவர் சிறப்பாக பேட்டிங் செய்ய தடுமாறி வருகிறார். மேலும் இந்த தொடரிலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார் ஆனாலும் அவர் செய்த ஒரே தவறு ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மோசமாக வைத்து விளையாடி உள்ளார்.

ஏனெனில் அவருடைய பணியே துவக்க வீரராக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான். எப்பொழுதுமே அதிரடியான துவக்கத்தை அளிக்கும் இஷான் கிஷன் போட்டியின் ஆரம்பத்திலேயே மிக அபாயத்தை ஏற்படுத்தும் துவக்க வீரராகவே அறியப்படுகிறார். மேலும் அவரின் அதிரடி காரணமாகவே அவர் இந்திய அணியின் துவக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.

ஆனால் தற்போது தனது வழக்கமான அதிரடியை தவறவிட்டுள்ள இஷான் கிஷன் மிக மந்தமாக விளையாடுவதே அவர் செய்யும் தவறு. அவர் வழக்கமாக விளையாடும் வகையில் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை