தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!

Updated: Thu, Jan 04 2024 16:17 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக செயல்பட்டுவந்தவர் ஆரோன் ஃபிஞ்ச். இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார். ஆனால் அதன்பின் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றோடு வெளியேறியது. 

இதையடுத்து அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் அவர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் லீக் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். மேலும் நடப்பு சீசனில் கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக விளையாடி வரும் ஆரோன் ஃபிஞ்ச், இன்று தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் நேசித்தேன். இதில் சில ஏற்றத்தாழ்வுகளும் இருந்தன. இருப்பினும் இதில் நான் பெரிய உச்சத்தை எட்டியதாக உணர்கிறேன். மேலும் எனது பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் விரும்பினேன். பிபிஎல் பட்டத்தை வெல்வதை எந்த தருணத்திலும் ஒப்பிட முடியாது, அது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் நான் நினைவில் வைத்திருக்கும் ஒன்று. எனது தொழில் வாழ்க்கை முழுவதும் ஒரே கிளப்பில் விளையாடியதில் பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 103 டி20 போட்டிகளில் விளையாடி 2 சதங்களுடன் 3,120 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை 150+ ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையையும் அவர் தன்வசம் வைத்துள்ளார். இதுதவிர டி20 கிரிக்கெட்டில் 11,458 ரன்களை விளாசியுள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியளில் 7ஆம் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஆஸ்திரேலிய அணிக்காக 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆரோன் ஃபிஞ்ச் 17 சதம், 30 அரைசதங்களுடன் 5,406 ரன்களையு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் விளையாடி 278 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 92 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 15 அரைசதங்களுடன் 2,091 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை