வங்கதேச டெஸ்ட் தொடரில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு?

Updated: Thu, Dec 08 2022 12:32 IST
Image Source: Google

தற்போது வங்கதேசம் சென்று மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி, இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவில் இரண்டிலும் தோல்வியை தழுவி ஒரு நாள் தொடரை இழந்திருக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற 10ஆம் தேதி நடக்க உள்ளது.

இதற்கிடையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் நடுவே பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மாவின் கையில் பந்து பலமாகப்பட்டதால் வலியில் துடித்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்தனர். அப்போது அவருக்கு எலும்பு முறிவு இல்லை. எலும்பு சற்று விலகி உள்ளது என்று தெரியவந்துள்ளது.

அத்தகைய வீக்கத்துடன் ஒன்பதாவது வீரராக களம் இறங்கி இந்திய அணிக்கு கிட்டத்தட்ட வெற்றியை பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையை கொடுத்தார் ரோகித் சர்மா. இனியும் ரோகித் சர்மா மீது ரிஸ்க் எடுக்க முடியாது என்ற காரணத்தால் உடனடியாக அவரை நாடு திரும்பச் சொல்லி ராகுல் டிராவிட் உட்பட மருத்துவ குழுவினர் வலியுறுத்தி இருக்கின்றனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று ராகுல் டிராவிட் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு வெளியிட்டார். டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பாரா? என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதற்கு, “டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கிறது. ஆகையால் தற்போது எதுவும் கூற முடியாது” என ராகுல் டிராவிட் பதில் அளித்திருக்கிறார்.

இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து தற்போது வரை வரும் தகவலின்படி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். ஆகையால் அவருக்கு மாற்று வீரராக தற்போது இந்தியா ஏ அணியின் கேப்டனாக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் எடுத்து வரப்படலாம் என தெரிகிறது.

மேற்கு வங்கம் அணியின் தொடக்க வீரராக இருந்து வரும் அபிமன்யு ஈஸ்வரன் தற்போது இந்தியா ஏ அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். வங்கதேச ஏ அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இவர் சதம் அடித்திருக்கிறார். நல்ல துவக்க வீரராகவும் சிறந்த ஃபார்மிலும் இருப்பதால் ரோஹித் சர்மாவிற்கு சரியான மாற்றுவீரராக டெஸ்ட் போட்டிகளில் இவர் இருப்பார் என்ற அடிப்படையில் உள்ளே எடுத்து வரப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

வருகிற ஜனவரி மாதம் நியூசிலாந்து அணி இந்தியா வந்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. ரோஹித் சர்மா அதற்குள் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று மகிழ்ச்சிகரமான தகவல்களும் வருக்கின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை