இனி ஐபிஎல் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தான் இளம் வீரர்களுக்கு புதிய வழி - அபினவ் முகுந்த்! 

Updated: Sat, Jun 24 2023 13:55 IST
Abhinav Mukund darts brain teasers after India's squad announcement for West Indies tour! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனியர் வீரர்களான புஜாரா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முகமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்களும் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கடந்த இரு ஆண்டுகளாக சர்ஃப்ராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் பிரியங்க் பஞ்சால் உள்ளிட்டோர் அதிக ரன்களை விளாசி நீண்ட நாட்களாக இந்திய அணியின் தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதனால் விரக்தியடைந்த தமிழக முன்னாள் வீரர் அபினவ் முகுந்த், “இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்கள் தேர்வு செய்துள்ளதை புரிந்துகொள்ள முடியவில்லை. இனி ஒரு இளம் வீரர் தனது மாநில அணிக்காக ஆடுவதினால் பெருமை கொள்வதற்கு எந்த ஊக்கமும் அளிக்கப்படவில்லை. இந்திய அணியில் விரைவாக இடம்பிடிக்க இனி ஐபிஎல் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தான் புதிய வழியாக அமைந்துள்ளது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

மும்பை அணிக்காக கடந்த இரு சீசன்களில் அதிக ரன்களை குவித்த சர்ஃப்ராஸ் கான், வங்கதேச தொடரில் ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோரை அபினவ் முகுந்த் இந்திய அணிக்காக தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர்களில் ஒருவர் கூட இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படாதது அபினவ் முகுந்த் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை