ஐஎல்டி20 2024: ரஸல் அதிரடியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் வெற்றி!

Updated: Thu, Feb 01 2024 11:53 IST
ஐஎல்டி20 2024: ரஸல் அதிரடியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் வெற்றி! (Image Source: Google)

ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேமி ஸ்மித் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேமி ஸ்மித் ஒரு ரன்னிலும், ஜேம்ஸ் வின்ஸ் 11 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் லின் அரைசதம் கடந்த கையோடு, 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 67 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து உஸ்மான் கான் 23 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய் ஷிம்ரான் ஹெட்மையர் 19 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைச் சேர்த்துள்ளது. அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல், இமாத் வசீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி, அலி கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். இதனைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் ஜோ கிளார்க் 14 ரன்களிலும், அலிஷான் ஷராஃபு 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான மைக்கேல் கைல் பெப்பர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த கையோடு 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய லௌரி எவான்ஸும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆண்டரே ரஸல் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை