அபுதாபி டி10 லீக்: டாம் பாண்டன் ஆதிரடியில் அபுதாபியை வீழ்த்தியது டெல்லி புல்ஸ்!
அபுதாபி டி10 லீக் தொடரின் நடப்பு ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டீம் அபுதாபி மற்றும் டெல்லி புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டீம் அபுதாபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணிக்கு ஜேம்ஸ் வின்ஸ் - டாம் பாண்டன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் அரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் பாண்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 37 ரன்களைச் சேர்த்திருந்த ஜேம்ஸ் வின்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷதாப் கானும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டாம் பாண்டன் 1 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் 10 ஓவர்கள் முடிவில் டெல்லி புல்ஸ் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. டீம் அபுதாபி அணி தரப்பில் அல்லா கசான்ஃபர், நூர் அஹ்மத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய அபுதாபி அணியில் கேப்டன் பில் சால்ட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் 22 ரன்னில் கைல் மேயர்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லூயிஸ் டூ ப்ளூய் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய லௌரி எவான்ஸ் எதிர்கொண்ட முதல் பந்திலேயும், அதிரடியாக விளையடிய ஆசிஃப் கன் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 18 ரன்னிலும், அல்லா கசான்ஃபர் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் டீம் அபுதாபி அணி 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி புல்ஸ் தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டெல்லி புல்ஸ் அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் டீம் அபுதாபி அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக இத்தொடரில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் மோரிஸ்வில்லே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நேரடியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம், மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணியானது இரண்டாவது குவாலிஃபயர் சுற்றுக்கு சென்றதுடன், அதில் டெல்லி புல்ஸ் அணியை எதிர்த்து இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.