முஜீப், நவீன், ஃபரூக்கி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தடை - ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, ஐபிஎல்-இல் விளையாடுவதன் மூலம் வெளிநாட்டு வீரர்களுக்கும், இந்தியாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பல வெளிநாட்டு வீரர்களுக்கு, அவர்களுக்கு கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஐபிஎல் நல்ல அடித்தளத்தை அமைத்தும் கொடுத்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை, தங்கள் அணியில் இடம் பெற கடும் போட்டி போட்டு கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் பட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு மட்டுமின்றி சில அசோசியேட் நாடுகளின் வீரர்களும் ஐபிஎல்லில் விளையாடி உள்ளனர்.
அந்த வகையில், அசோசியேட் அணியாக இருந்து, சமீப காலங்களில் முக்கிய அணியாக மெருகேற்றிக் கொண்டிருக்கும் ஆஃப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் ஐபிஎல் போட்டிகள் விளையாடி தங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளனர். ஆஃப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான ரஷித் கான், மற்றும் முகமது நபி, ஐபிஎல் போட்டிகள் விளையாடி தங்களுக்கென ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்.
ஐபிஎல் போட்டிகளில் மேலும் சில இளம் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தற்போது விளையாடி வரும் நிலையில், மூன்று ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்து இருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அந்த மூன்று வீரர்களும் ஐபிஎல் 2024இல் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் அந்நாட்டின் கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், 2024 ஜனவரி முதல், ஓராண்டுக்கு தேசிய ஒப்பந்தத்திற்கான தகுதியை இழக்கின்றனர், மற்றும் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் நடக்கும் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாட, தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற இயலாது என இரண்டு தடைகளை அவர்கள் மீது விதித்துள்ளது.
இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல்-ல் இவர்கள் ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அதிரடி முடிவால், அவர்கள் அங்கம் வைக்கும் ஐபிஎல் அணிகள் கலக்கத்தில் உள்ளனர். நவீன் உல் ஹக் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் 2023ல் விராட் கோலிவுடன், களத்தில் மோதி பெரும் பரபரப்புக்கு உள்ளானார். பின்னர் இருவரும் உலகக் கோப்பை போட்டியில் சமாதானமான நிலையில், ஐபிஎல் 2024ல் மீண்டும் இவர்களை களத்தில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
கௌதம் கம்பீர் மற்றும் ஆன்டி பிளவரின் விலகல் என சரிவை சந்தித்து வரும் லக்னோ அணி, முக்கிய வேக பந்துவீச்சாளராக செயல்பட்டு வரும் இவரது தடை, மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும், இடதுகை வேக பந்துவீச்சாளர் ஃபசல் ஹக் ஃபரூக்கி, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் ஃபோர்ட் தடை விதிக்கப்பட்ட மற்றொரு வீரர். ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் பல வெளிநாட்டு வீரர்கள் அங்கம் வகிப்பதால், இவரது தடை அந்த அணியை பெரிதும் பாதிக்காது என்றே கருதப்படுகிறது.
முஜீப் உர் ரஹ்மான் சமீபத்தில் நடந்த ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 2 கோடிக்கு வாங்கப்பட்டார். சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, மற்றும் சுயாஷ் சர்மா என பலமான சுழல் பந்துவீச்சாளர் கூட்டணி கொண்ட கொல்கத்தா அணிக்கு இவரது வருகை மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவரது தடை சிறிய பின்னடைவு என்றாலும் பலமான சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள கொல்கத்தா அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.