ஸாம்பா, ஸ்டார்க் இருவரும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் - அபிநவ் முகுந்த்!
ஆஸ்திரேலியா அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணியிடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்து, இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை விளையாட இந்தியா வந்திருக்கிறது. இந்தத் தொடருக்கு இரண்டு அணிகளுமே தங்களது அணிகளை அறிவித்திருக்கின்றன. ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம்பெற்ற இருக்கிறார்கள்.
அதே சமயத்தில் இந்திய அணியில் முதல் இரண்டு ஆட்டத்தில் முக்கிய நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெரிய பிரச்சினையாக இருந்து வருவது, அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாதான்.
அவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தற்பொழுது அவரை எப்படி எதிர்கொள்வது? அவர் எந்த மாதிரியான பந்துவீச்சாளர்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த அபிநவ் முகுந்த் தன் கருத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “நிச்சயமாக ஸாம்பாவும் ஸ்டார்க்கும் இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள். ஸாம்பா ஐபிஎல் விளையாடிய பொழுது நன்றாக பந்து வீசி இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு திரும்பும்போது வேறு மாதிரியான வீரர்.
அவர் ஆஸ்திரேலியா அணியில் பயன்படுத்தப்படும் விதம், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அவருக்கு தரும் பாதுகாப்பு என்பதன் அடிப்படையில் இப்படி ஆகிறது என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தால் ஸாம்பா மிக முக்கியமான பந்துவீச்சாளராக இருப்பார்.
அவர் எப்பொழுதுமே இந்தியாவுக்கு எதிராக மிகச் சிறப்பாகப் பந்து வீசி இருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு எதிராக மிகச் சிறப்பாகப் பந்துவீசி இருக்கிறார். ஆனால் அவரை யாராவது தாக்கி விளையாட வேண்டும். ஸாம்பாவை இன்னும் இந்திய அணியினர் கொஞ்சம் நெருங்கி விளையாட வேண்டும்.
அவர் பந்தை திருப்பக் கூடியவர் கிடையாது. அவர் தன்னுடைய கூக்ளியில் மட்டும் கொஞ்சம் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். அவர் சஹால் போல் ஒரு டாப் ஸ்பின்னர். எனவே ஸாம்பா மற்றும் ஸ்டார்க் இருவரும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.