ஆஸ்திரேலிய அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆடம் ஸாம்பா!

Updated: Wed, Jun 12 2024 07:58 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - நமீபியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது இன்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் மதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் நமீபியா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நமீபிய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக அறியப்படும் நிக்கோலஸ் டேவின், ஜான் ஃபிரைலிங்க், ஜேஜே ஸ்மித், டேவிட் வைஸ் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் 4ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தேவையான பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த எராஸ்மஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதன் காரணமாக நமீபியா அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது விக்கெட்டையும் கடந்து அசத்தியுள்ளார். 

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை ஆடம் ஸாம்பா படைத்துள்ளார். மேலும் உலகளவில் இச்சாதனையை படைக்கும் 15ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 2016ஆம் ஆண்டு அறிமுகமான ஆடம் ஸாம்பா, 82 போட்டிகளில் விளையாடி இச்சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை